Sunday, January 25, 2015




                                                                      தமிழ் மொழி

         ப்போதெல்லாம் தமிழின் முழக்கங்கள் இணையத்தளங்களில் கேட்டபடியே இருக்கிறது.மகிழ்ச்சியான விடயமும் கூட.மார்க்சிய-லெனினியக் கூட்டமைப்பின் உறுப்பு அமைப்புகள் மற்றும் சேகுவாராக் கருஞ்சட்டை வீரர்கள் என்று ஒரு மிகப்பெரும் படை தமிழ்த் தேசியம் பற்றிய கனவுலகில் மிதந்த வண்ணமும் இருக்கிறார்கள்.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு மொழியே பெரும் துணையாக விளங்குகிறது. மனிதனின் பண்பாட்டுச் சிறப்பிற்கும் மொழி வழி வகுக்கிறது.மொழி இல்லாத மனித வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்த்தால் ஒரு வெறுமையான நிலையே உள்ளதைக் காணலாம்.

உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் மனிதர்களால் பேசப்படுகின்றன.
அவைகளில் எழுதும் மொழியாக இல்லாமல் பேசும் மொழியாக மட்டுமே பல மொழிகள் இருக்கின்றன.பழமையினாலும்,இலக்கிய வளத்தாலும் புகழ்பெற்று விளங்கும் மொழிகளில் தமிழ் மொழி தலையாயது.'என்றிவள் பிறந்தாள் என்று உலகறியா' ஏற்றம் கொண்டவள் தமிழ்த்தாய்!இலக்கணம் கண்டபின் இலக்கியம் கண்டனரா அல்லது இலக்கியம் கண்டபின் இலக்கணம் கண்டனரா என்று ஆராய்ந்து அறிய முடியாத சிறப்பினை உடையது தமிழ்!

இந்த வகையில் நான் ஒரு பழைய ஆனந்தவிகடனில் (12.02.1967)வாசித்ததை இங்கு இணைக்க விரும்பினேன்.

சீன தத்துவ ஞானி கன்ஃபூஸியஸ் என்பவரிடம்,அவருடைய சீடர் ஒருவர் "தேச நிர்வாகத்தை ஒப்படைத்தால் நீங்கள் செய்யும் முதல் வேலை என்ன?"என்றார்.

"நிச்சயமாக மொழியைச் சீர்திருத்துவதுதான்"என்றார் அவர்.அங்கு கூடி இருந்தவர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்து"மொழிக்கும் நிர்வாகத்திற்கும் என்ன சம்பந்தம்?"என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் "மொழி செம்மை செழிப்புப் பெறாவிடில் எதைச் சொல்ல விரும்புகிறார்களோ தெளிவுற-ஐயம் திரிபுற அறிந்துகொள்ளும் முறையில் சொல்ல முடியாது.நினைக்கப்பட்டது சொல்லப்படவில்லையானால் எது செய்யப்பட வேண்டுமோ அது நிறைவேறாது.நிறைவேறாத சமயத்தில் ஒழுக்கமும் பண்பும் குறையும்.நீதியும் நியாயங்களும் கலைந்து போகும்.மயக்கமும் குழப்பமுமே கூடி நிற்கும்.எனவே சொல்லப்படும்
விடயம் தெளிவாக இருக்கவேண்டும்.ஆகவே மொழி செம்மையுற வேண்டியது எல்லாச் செயலுக்கும் முன் நிற்கிறது"என்றார் கன்ஃபூஸியஸ்.

உண்மையில் சிந்தித்தால் இதுவும் ஒருவையில் நியாயமாகப் படுகிறதுதானே !

No comments:

Post a Comment